ஆலய தரிசனம் திருமூர்த்தி மலை

இன்றைய ஆலய_தரிசனம்:

அருள்மிகு
ஶ்ரீ
(பிரம்மா, விஷ்ணு, சிவன்) அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருமூர்த்தி மலை,
உடுமலைப்பேட்டை வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.

( மேற்கு தொடர்ச்சி மலைகளின் பெருந்தொடர்களில், தென்திசைநோக்கி பரவியுள்ள ஆனைமலைகளில் ஒன்றாகத் திகழ்வது திருமூர்த்தி மலை.

இந்த மலை அடிவாரத்திலுள்ள தோணி நதி எனும் பாலாற்றங்கரையில் உள்ள சிறிய குடவரைக்குன்றில், சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவர்களாக,
ஶ்ரீ பிரம்மா, விஷ்ணு, சிவன்  மூவரும் பாறையில் வடிக்கப்பட்ட சுயம்பு மும்மூர்த்திகளாக அருட்காட்சியளிப்பது தலச்சிறப்பு.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின்
பதிவுகள் சில மட்டும்)

இத்தலத்தின் எட்டுக்கால் மண்டபத்தில் குழந்தைகளாக விளையாடியதாக கூறப்படும், (சுயம்பு) மும்மூர்த்திகளுக்கு உற்சவ மூர்த்திகள்
உள்ளதும், மும்மூர்த்திகளின்மீது பக்தர்கள் சந்தனம் எறிந்து வேண்டிக்கொள்வது தலச்சிறப்புக்களில் ஒன்று.

ஞான குருவாக விளங்கும்
இத்தல ஈசனுக்கு,
ஶ்ரீ அமணலிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர்.
அமணன் என்றால் ‘குற்றமற்றவன்’ என்றும், ‘அழகன்’ என்றும், ‘குற்றமற்ற அழகன்’ என்றும்,
‘அழகிய லிங்கம்’ என்றும் மேலும், இப்பெயருக்கு இன்னும் பல பெயர்களில் பொருள் கொண்டிருப்பதும் (இத்தல) இறைவனின் சிறப்பாகும்.

அத்ரி முனிவரின் மனைவி அனுசுயாதேவி தங்களுக்கு மும்மூர்த்திகளே பிள்ளையாக வரவேண்டும் என தவமிருந்த தலம் இதுவென்பதும், திருக்கயிலாயத்தில் நடைபெற்ற ஈசன் தம்பதியரின் கல்யாண திருக்கோலத்தை காண  விரும்பி தவமிருந்த அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணகாட்சியளித்த தலங்களில் இதுவும் ஒன்று என்பதும் இந்த திருமூர்த்தி தலச்சிறப்பாகும்.

இம்மலையின்மீது பஞ்சலிங்கம் உள்ளது.
அத்ரி மகரிஷி தம்பதியர் நிதமும் இந்த பஞ்சலிங்கத்தை வழிபட்டுவந்ததாகவும்,
இன்றளவும் அரூபமாக வழிபடுபவதாகவும் கூறப்படுகின்றது.

மும்மூர்த்திகளும் அருள்புரியும் இத்திருத்தலத்தில்,
நினைத்தது (நியாயமானவை) எதுவாயினும் அது நிச்சயமாக கைகூடும் என்பது நம்பிக்கை.

இந்த திருமூர்த்தி மலை ஆலயத்தில், அமாவாசை வழிபாடு
சிறப்புமிகு விசேஷமாம்).

ஓம் நமச்சிவாய நமக:

 289 total views,  1 views today