ஆலய தரிசனம் – Aalaya Darisanam

ஆலய தரிசனம் – Aalaya Darisanam

இன்றைய #ஆலய_தரிசனம்;

அருள்மிகு
ஶ்ரீ கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத
ஶ்ரீ ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்,
(திருவூறல்)
தக்கோலம் ஊர்,
அரக்கோணம் வட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம்.

( “ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டு அழகார் நன்றும் கானமர் மறிக்கைக் கடவுள் கருதும் இடம் வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்து அழகார் நம்மை ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே” என,
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம்,
(தொண்டை நாட்டுத்தலங்களில், 12-வது தலம்) தேவார பாடல் பெற்ற 276-சிவாலயங்களில், 245-வது தேவாரத்தலமாகும்.

(சிறப்புக்கள் பல மிகுந்த இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தின் கருவறையில் அருட்காட்சியளிக்கும்
நம் இனிய ஈசன்,
மணலால் ஆன சுயம்புலிங்க திருமேனியர் என்பதால், இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.

உத்தராயண காலத்தில்,
இளம் சிகப்பு நிறத்திலும், தட்சிணாயன காலத்தில் வெள்ளைநிறத்திலும்
காட்சிதருவதும், பார்வதிதேவி இந்த இறைலிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால்,
இங்கு பூஜைகள் செய்யும் சிவாச்சாரியார்கள்
இந்த லிங்கத்தை தொடாமல்தான் இன்றும் பூஜிக்கிறார்கள்
என்பதும் இச்சிவலிங்கத்தின் பெரும்சிறப்பாகும்.

(ஆதிகாலத்தில்,
ஒருமுறை இப்பகுதியில் வெள்ளம் வந்தபோது,
மணலால் ஆன, இந்த லிங்கத்தை வழிபட்டுக்கொண்டிருந்த பாரவதிதேவி,
அது தண்ணீரில் கரையா வண்ணம்
அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், 
அதையும் தாண்டி வெள்ளம் அரித்ததுபோல லிங்கத்தின் கீழ்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம் என்பது பரவசச்சிறப்பு)

இத்தலத்தில், நின்ற திருக்கோலமாக
வீற்றிருக்கும் அம்பிகை வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்திமிக்கவளாக திகழ்வதும், இவளுக்கே முதல் பூஜை என்பதும் தல விசேஷம்.

முறையற்ற யாகம் செய்ததற்காக தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நினைத்து தக்கன் (தலையை கொய்த தலம் என்பது ஐதீகம்) ஓலமிட்டதாலும், இந்த ஆலயத்தின் தலவிருட்சம் தக்கோலம் என்பதாலும் இத்தலத்திற்கு ‘தக்கோலம்’ எனும் பெயர் வந்ததாக கூறுவர்.ஆலய தரிசனம் – Aalaya Darisanam

ஒரு புராண நிகழ்வின்படி;
தேவ குருவான பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவர், தன் தீரா நோய் நீங்க இத்தல ஈசனை வழிபட, நந்திதேவர் தன் வாய்வழியாக கங்கையை பாயவிட்டார். அது இங்குள்ள சிவலிங்கத்தினைச் சுற்றி வந்து, மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது. அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்கப்பெற்றாராம்.
(இறைவனை) ஜலம் (தீர்த்தம்) சூழ்ந்து சென்றதால்,
இத்தல சிவனுக்கு
‘ஶ்ரீ ஜலநாதீஸ்வரர்’ எனும் திருப்பெயர் உண்டானதாக தலவரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்திலுள்ள நந்தியின்  வாயிலிருந்து எப்போதும் நீர் வழிந்து வந்ததாலும், இறைவனது திருவடியிலிருந்து நீர் சுரப்பதாலும் இத்தலத்திற்கு ‘திருவூறல்’ எனும் பெயர் ஏற்பட்டதாக (மேலும்) தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

(இத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனை, அருணகிரிநாதர்
தன் திருப்புகழில் பாடியுள்ளார்)

காமதேனு இத்தல ஈசனை வழிபட்டுள்ளாள். எனவே, நாமும் இங்கு வழிபாடு செய்வது
100-மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.

*கோஷ்டத்திலுள்ள* *சிறப்புமிகு*
*ஶ்ரீ யோக தட்சிணாமூர்த்தி,*
கல்லாலான மரத்தினடியில் இடது காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து ‘உத்கடி ஆசன நிலையில்’ அமர்ந்துள்ளார். (நமது தமிழகத்தில் உள்ள மூன்றாவது குரு பரிகார ஸ்தலமும் கூட) இந்த ஆசனம் மனதை ஒருமுகப்படுத்துவதாகும். ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவர் தலையை இடதுபுறமாக சாய்த்து, மாணவர்களை அடக்கி ஆளும் ஆசிரியரைப்போன்ற தோரணையில்  இருக்கிறார். காண்பதற்கரிய
இந்த அபூர்வ திருக்கோல தரிசனம் காணப்பரவசம்.
ஒரு நிலை நில்லாது
மனம் அலைபாயும் மாணவச்செல்வங்கள்
இவரை வழிபடுவது நன்மை பயக்குமாம்).

ஓம் நமச்சிவாய நமக:

ஆலய தரிசனம் – Aalaya Darisanam

Loading