தொழிற்சாலைகளுக்கு வாஸ்து | Vastu for Factory

வாஸ்து வகையில் தொழிற்சாலைகள் மற்றும், பெரும் தொழில் நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை வைத்து பெரிய சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் பெரிய அளவில் கடன் வாங்கி தொழில் நடத்துகிற நிறுவனங்கள் அடுத்த கட்டத்திற்கு வருவது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த இடத்தில் தொழில் தெரிந்தால் மட்டும் பத்தாது. தொழில் சார்ந்த அறிவு ஒரு 20% புத்திக்கூர்மை,  10% அறிவு என்கிற விஷயங்கள் இருந்தாலும், தொழிலாளர்கள் என்கிற விஷயம் ஒரு 20% கொடுத்தாலும், மீதி 50 சதவீதம் பணம் சார்ந்த நிகழ்வு என்பது வேண்டும்.  பணத்தை போட்டு பணத்தை எடுப்பது என்பது மனித வாழ்க்கையில் லேசுபட்ட காரியம் கிடையாது. இந்த விதி ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும் கிடையாது. பல நபர்கள் இணைந்த கூட்டு தொழிற்சாலைக்கும் பொருந்தும். அந்த வகையில் ஒரு தொழிற்சாலையின் வாஸ்து விதிகளைத் தெரிந்துகொள்வோம்.

தொழிற்சாலைகளில் முதல் விதியாக சதுரம் அல்லது செவ்வகம் என்பது மிக மிக முக்கியம். அந்த விதிகளுக்கு உட்படுத்தி தொழிற்சாலையின் மதில் சுவர்களை அமைக்க வேண்டும். மிகப்பரந்த அளவில் தொழிற்சாலைகள், பல ஏக்கர் கணக்கில் இருக்கும். அப்படி இருக்கின்றபோது முடிந்த அளவுக்கு அந்த தொழிற்சாலையின் நான்கு புறமும் சதுரம் அல்லது செவ்வகமான முதல் விதிக்கு கொண்டு வருவது மிக மிக முக்கியம். அதற்கு பிறகு ஏதாவது ஒரு பகுதியில்  இருக்கும் காலி இடத்திற்கு போவதற்கு  வெளிப்புறப் பகுதியில் இருந்து ஒரு வழியை பாசிட்டிவான இடத்தில் ஏற்படுத்திய பிறகு வெளிப் பகுதிகளில் வடகிழக்கு தவிர திசைகளிலும், மரம், செடி கொடி சார்ந்த விஷயங்களை தாராளமாக தொழிற்சாலை இடத்தில் உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் சுற்றுச் சுவர் என்பது சதுரம் அல்லது செவ்வக வேண்டும். இது முதல் விதியாக வாஸ்துவின் வழியே பார்க்கப்படுகிறது. எந்த இடத்திலும் பெரிய அளவில் தொழிற் சாலைகளை கட்டும்போதும், அல்லது இயங்கிக் கொண்டிருக்கிற தொழிற்சாலையின் சுற்றுப்புற பகுதிகளில் சாலைகளை கூர்ந்து கவனிக்கவேண்டும். எதிர்மறை தெருக்குத்து, தெரு பார்வைகள் வருவது தவறு. குறிப்பாக தென்கிழக்கு பாகத்தில் கிழக்கு சார்ந்தும், வடமேற்கு வடக்கு பாகத்தில் இருந்தும், தென்மேற்கு தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த பகுதிகளிலும், தெருக்குத்துக்கள் என்பது ஒரு தொழிற்சாலைக்கு வரக்கூடாது. இதனை இரண்டாவது விதியாக பார்க்கவேண்டும்.
மூன்றாவது விதி என்பது தொழிற்சாலையின் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களின் கதவுகள், மற்றும் சுற்றுப்புற காம்பவுண்டில் இருக்கக்கூடிய கதவுகள், வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். நான்காவது விதி என்பது, தொழிற்சாலையின் உள்ளே இருக்கக்கூடிய பள்ளங்கள். தவறான இடங்களில் இருக்கக்கூடாது . தண்ணீர் தொட்டி என்பது தரைத்தளத்தில் இருக்கின்ற போது வடகிழக்கிலும், செப்டிக் டேங்க் தொழிற்சாலை சார்ந்த பள்ளங்கள் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். முடியாவிட்டால் தென்கிழக்கு  அமைத்துக் கொள்ளலாம். இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தொழிற்சாலை நடத்துகின்ற உரிமையாளர்கள், மக்களுக்கு தேவையான பொருள்களை தயாரித்து ஒரு சேவை சார்ந்த நிகழ்வைத்தான் செய்கிறார்கள். ஆனால் அவ்வளவு பெரிய முதலீடு மற்றும் வங்கிக் கடன் மூலம் பெறுகின்ற பணத்தை, ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக அடைக்க வேண்டும். அதற்காக போராட வேண்டிய சூழலே ஏற்பட்டு விடுகிறது. ஒரு சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள், மற்றும் உரிமையாளர்கள் இடையே சம்பளம் சார்ந்த நிகழ்வுகளில் பிரச்சினை ஏற்பட்டு ஒரு காலகட்டத்தில் தொழிற்சாலையை மூட கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது. மற்றும் ஒரு தொழிற்சாலையில், பணம் சார்ந்த நிகழ்வுகளில் சரக்கு அனுப்பிய பிறகு, பணம் வருவது நின்று விடுகிற காரணத்தாலும், தொழிற்சாலை மூடப்பட்டு விடுகிறது . இதற்கு காரணம் என்னவென்று ஆராயும் பொழுது, ஒரு தொழிற்சாலைகளுக்கு வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பள்ளங்களும் மேடுகளும் இந்த வேலையை செய்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. ஒரு தொழிற்சாலையின் வடக்கு, வடகிழக்கு அல்லது, மத்திய பாகங்களில் பூமி உயரமான நிலை, உயரமான பெரிய மரங்கள், மலைக் குன்றுகள், மேம்பாலங்கள் வருவதால் கடன் உருவாகக் கூடிய நிலை ஒரு தொழிற்சாலைக்கு ஏற்பட்டு விடுகிறது. மற்றும் மேற்கூறிய பிரச்சினைகள் வாஸ்து தோஷங்களை கொடுப்பதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை, மனக்குழப்பங்கள், தொழிலாளர் ஒற்றுமை குறைவு, தொழிற்சாலைக்குள் இருக்கும் நபர்களே திருடுவதும், பொய்க்கணக்கு எழுதுவதும், வேலை நிறுத்தம் செய்வதும், விபத்துக்கள் நடப்பதும், நடந்து விடுகின்றன. தொழிற்சாலை அருகில்  வெளிப்புற தென்மேற்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் வளர்ச்சி அடைந்த உயரமான மரங்கள், பூமிக்கு உயரமான மலை குன்றுகள், மேம்பாலங்கள் வரும்பொழுது தொழிற்சாலைக்கு சாதகமாக அமையும். அதே தொழிற்சாலைக்கு கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் பெரிய மரங்கள், மேம்பாலங்கள், உயரமாக வரும்போது, எதிரிடை பலன்களை கொடுக்கிற தொழிற்சாலை ஆகத்தான் இருக்கும்.

ஒரு தொழிற்சாலையில் மிக மிக முக்கியமாக அமைப்பு என்பது தொழிற்சாலையின் உற்பத்தி சார்ந்த கனமான பொருள்களை தெற்கு சார்ந்த பகுதிகளிலும், தென்மேற்கு சார்ந்த பகுதிகளிலும் பொருத்தவேண்டும். தொழிற்சாலையில் மின்சாரம் சார்ந்த, பாய்லர் சார்ந்த தொழிற்சாலை பாகங்களை தென்கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் அமைக்க வேண்டும். தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியானதும் வெளியேறும் அமைப்பு என்பது, வடமேற்கு பகுதியில் இருந்து வெளியில் செல்வது போல் அமைக்க வேண்டும். தொழிற்சாலையின் உற்பத்திக்கான மூலப்பொருள், தென்மேற்கு தெற்கு பகுதிகளில் வைப்பது போல இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெரிய தொழிற்சாலைகளில், சிறிய அளவில் அலுவலகங்களை தென்மேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டாம். அது மிகமிக வாஸ்துவின் வழியாக தவறு.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *