கர்போட்டம் ஆரம்பம் இன்று

மார்கழி.. சொல்லும் போதே சிலிர்ப்பு.. “நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..” எனத் தூயிலெப்பும் குடுகுடுவைக்காரரின் குரலில் எங்கள் உறக்கம் விடியும் மார்கழி நன்னாட்களில்..

அதனைத்தொடர்ந்து பெருமாள் கோயிலின் ஒலிபெருக்கி, “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனத் தனது பனியைச் செவ்வனே செய்து கோழியையும் எழுப்பிவிடும் கூவ.. அது முடியும் தறுவாயில் சிவன் கோயிலின் ஒலிபெருக்கி அதற்கு எசப்பாட்டு பாடும். இதை எல்லாம் கேட்டுக்கொண்டே..

பசுஞ்சாணம் தெளித்து பெரிய கோலமிட்டு, சாணத்தைப் பந்தாய் உருட்டி அதன் தலையில் பூசனிப்பூவைச் சொருகிக் கோலத்தின் மத்தியில் வைத்து, சற்று தள்ளி நின்று இரசித்துப் பார்க்கும் பொழுதில் வரும் அலாதியே தனிதான். தினம் என்ன கோலம் போடுவது என முடிவு செய்து விட்டு படுத்துறங்குவோம் நானும் எனது அக்காவும்.. இந்தக் கூத்து பொங்கல் முடியும் வரை தொடரும்..

ஆண்டாளை நினையாத மார்கழியா.. அவளை நினைத்தாலே மழைக்கும், பாவை நோன்புக்கும் உள்ள தொடர்பைச் சொல்லும் ஆண்டாளின் பாடல்கள் பக்கம் வந்து தீண்டிச்செல்லும்..

பாவை நோன்பு ஆரம்பிக்கும் காலம்,

“மார்கழித் திங்கள் மதி நிறைந்தநன்னாள்”
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்”

“தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்..”

எனச் சொல்லும் ஆண்டாள்..

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராட்டினால், தீங்கின்றி  நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்” என்றும் கூறியுள்ளாள்.

மார்கழி மாதத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தை  “கர்போட்டம்” என்பார்கள். என்னவொரு பேரழகான வார்த்தை.. அடுத்த வருடம் வரும் மழைக் காலம்  அதற்கு முன்னாலேயே மார்கழி மாதத்தில் சூல் கொள்கிறது, அது மழைக்குக் கர்ப்பம் தரிக்கும் காலம் என்று அக்காலத்தில் நம்பினார்கள். அந்த சமயத்தில் வாயு மண்டலத்தில் தென்படும் மேகக்கூட்டங்களின் அமைப்பு, காற்றின் நிலை எல்லாம் வைத்து, வரும் ஆண்டின் மழைக்காலம் அமையும் என்ற கணிப்பு அவர்களுக்கு இருந்தது.

மார்கழி மாதம் தனுசு ராசியில் சூரியன் நகரும் பதினான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைபொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து. இதை விளக்கும் பழந்தமிழ் பாடல்..

“தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்   
தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே      
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக   
காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே”

அறிவியலின் படி, மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்ற Ultra Violet Rays என்று சொல்லப்படுகிற  கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி  உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வாசித்தறிந்த மார்கழியின் மகத்துவத்தை.

மழை என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். அதனாலேயே கார்காலமான மார்கழி மிகவும் பிடிக்கும்.. வைரமுத்து அவர்கள் எழுதின “மார்கழித் திங்களல்லவா..” பாடல் வரிகளை மாற்றி நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலுடன் இந்த மார்கழித் திங்களை வரவேற்கிற்று வாழ்த்துகிறேன்..

“மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா 
இது மழை வரும் பொழுதல்லவா..
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
உயிர் பெறும் உணர்வல்லவா…
வருவாய் நீயே வாழ்வும் பெரும் அழகாய்..”

மார்கழி மாத கர்போட்டம் என்பதுமேகம் கொண்ட சூல்- இது மழைக்காலங்களில் பிரசவிபபதே பருவமழை – கற்போட்ட காலத்தில் மழை பொழிவு ஏற்பட்டால் அந்த மழைமேக சூல் கலைப்பு.அதவாவது மேகத்துக்கு நேர்ந்த அபார்ஷன்.அந்த ஆண்டின் மழைப்பொழிவின் அளவு குறைபடலாம் – மறைபடலாம்.

கர்போட்டம்

Loading